உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை தேற்கடிப்பதற்கு சுதந்திர கட்சி முன்னின்று செயற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (08) ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய நாளை புதன்கிழமை ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திபோடுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள இறுதி முயற்சியையும் அனைவரும் இணைந்து தோல்வியடைச் செய்ய வேண்டும். சுதந்திர கட்சி இதில் முன்னின்று செயற்படும் என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
