2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை , தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்னெடுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் புதிய உத்தரவுகள் அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியாகாத ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதிச் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர, மற்றும் வி.சந்திரசேகரன் ஆகியோர் இடை மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதன்படி, மேற்கூறிய மனுக்கள் மீதான விசாரணையை தொடராதிருக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
