ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடத்தி வரும் வடக்கின் சமர் தொடரின் முதலாவது அரையிறுதியாட்டம் இன்று (11) உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்.மண்ணின் உதைபந்தாட்டத்தில் அசுர பலம் கொண்ட பலம் வாய்ந்த அணிகளான மயிலங்காடு ஞானமுருகன் வி.கழகமும் நவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகமும் மோதிக் கொண்டன.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காது தமது வேகமான அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தின.
முதற்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றன. பிற்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.
போட்டியின் இறுதியில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நவாந்துறை சென்.மேரிஸ் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி நவஜீவன்ஸ் வி.கழகம் மோதவுள்ளது.
இப்போட்டிகளுக்கு தமிழ் ஒளி செய்தி இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
