மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள குளம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்களின் சடலங்கள் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள மீனச்சிம்பேடி குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.
களுமுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் யோகேஸ்வரன் கிவேந்தன் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் ரஜிர்த்தனன், சத்தியசீலன் தனுஜன், வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.
நேற்று (13) மாலை உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு களுமுந்தன்வெளி கிராமத்திலுள்ள உயிரிழந்த ஒவ்வொருவரின் வீடிற்கும் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அத்தோடு மாணவர்களான வீரசிங்கம் விதுசன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது ஆண் பிள்ளையாகவும், சத்தியசீலன் தனுஜன், நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசி ஆண் பிள்ளையாகவும், தயாபரன் ரஜிர்த்தனன், இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாகவும் இருந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
