“இன்று தலைவரை வைத்து அரசியல் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். அதற்காக பல வதந்திகளை கூறுகின்றனர் .தயவு செய்து தலைவரை வைத்து அரசியல் செய்யவேணடாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தேற்றாத்தீவு மற்றும் மாங்காடு வட்டாரங்களுக்கான கிளைக் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டபாய ராஜபக்ச முகம் கொடுத்த கோட்டா ஹோ கம வை விடவும் பத்து மடங்கு அதிகமான எதிர்ப்பை ரணில் ஹோகம என்ற பெயரில் மக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலை உருவாகும்.
தலைவர் காட்டிய சின்னம் வீட்டுச் சின்னமாகும். இதனை பெருமையாக நாம் கூறுகின்றோம். இதே சின்னத்தினைக் கொண்டு அனுராதபுரத்தில் போட்டியிடலாமா? வேட்பாளர் தருவார்களா? போன்ற நிலையுள்ளபோது எந்த அடிப்படையில் தெற்கில் இருக்கும் கட்சிகள் இங்கு போட்டி போடியிடமுடியும்.
தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் சுதந்திரமாக மக்களை மக்களே ஆளவேண்டும் என்றும் தமிழர்களே தமிழர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளதே தவிர இலக்கு மாறவில்லை. இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கும் போது பலர் இன்று பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்” என்றார்.
