“உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நாட்டின் சட்டத்திற்கமைய, நடத்தப்பட வேண்டுமெனவும், இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது” எனறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நிறைவேற்று அதிகாரம் அல்லது பாராளுமன்றமானது தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுத்தல் மற்றும் இலங்கை மக்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை தெரிவு செய்வதை தடுத்தல் போன்ற தேர்தலை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்.
எனவே, அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி சபைத்தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு, அரசாங்கம் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கிறோம்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
