“இன்று நாடு அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது. இதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்க. இவர் ராஜபக்சர்களையும் அவரை தெரிவு செய்த 134 எம்பிக்களையும் பாதுகாக்கவே வந்துள்ளார். மக்களை பாதுகாக்க வரவில்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீண்டு நிலைக்கும் தீர்வு இல்லை என்பது எமது நிலைப்பாடு.
நாட்டு மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட நபர் ரணில் விக்ரமசிங்க. மக்கள் மனதை புரிந்துக்கொள்ள முடியாத நெஞ்சில் ஈரம் இல்லாத ஒரு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார். தேர்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துவிட்டார்.
நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைந்தால் ரணில், ராஜபக்சாக்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரம் விருப்பு வாக்கினை பெற்ற ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் அவருடைய விருப்பு வாக்கினை எண்ணுவது பொருத்தம் இல்லை என ஒதுக்கப்பட்டது. ஏனெனில் நாட்டு மக்களால் முழுதாக நிராகரிக்கப்பட்ட நபர் ரணில்.
இவருக்கு ஜனாதிபதி பதவியை தாரைவார்க்க முயற்சி செய்தவர்கள் ராஜபக்சர்கள். ரணில் தமது உற்ற நண்பன், செல்லப்பிள்ளை மற்றும் விசுவாசி என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.அதனால் தான் அவர் ஆட்சி காலம் ஏறியது முதல் ராஜபக்ஸகளை பாதுகாப்பதிலே செயல்பட்டு வருகின்றார்.
அவர் ஆட்சிக்கு வரும்போது அதிகமாக அனைவரும் கூறினார்கள், அவருக்கு பெரிய மூளை உள்ளது, வெளிநாட்டில் உள்ள ராஜதந்திரிகளோடு தொடர்புள்ளது, IMF போன்ற அனைத்து வங்கிகளுடனும் கொடுக்கல் வாங்கல் செய்வதில் வல்லவர். அதன் மூலம் நாட்டிற்கு நன்மைகளைப் பெற்றுத் தருவார் என மக்களிடம் நம்பிக்கை விதைத்தார்கள்.
ஆனால், இன்று அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு மக்களை, மாணவர்களை பழிவாங்கும் மற்றும் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத நெஞ்சில் ஈரமற்ற ஜனாதிபதியாக மாறியுள்ளார்.
நாட்டில் வாழும் மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னல்களை அனுபவித்து வருகின்றமை உதாரணமாகும். அத்தோடு தொடர்ந்து வரி மீது வரி விதித்து மக்களை வாட்டும் ஜனாதிபதியாக மாறியுள்ளார்.
கடந்த காலங்களாக பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது, அதனால் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டது, இறக்குமதி செய்ய நிதி இல்லை எனக்கூறி இறக்குமதி செய்யும் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் கடதாசி, அப்பியாச கொப்பி, பேனை மற்றும் பென்சில் ஆகிய பொருட்கள் விலை ஏறின. இதன் காரணமாக 40 லட்சம் மாணவர்கள் தலையில் இடியினை விழுத்தியவர் ரணில்.
இவ்வாறான கட்டத்தில் மூன்று மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் 30 அலகுகளுக்கு 360 ரூபாய் அறவிடப்பட்டது. அது 1300 ரூபாயாக மாறி உள்ளது. 67 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அனைத்து அலகுகளுக்கும் விலை பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக இவர் செய்வதற்கான காரணம் என்னவென்றால் கடந்த தேர்தலில் தன்னை படு தோல்வியடையச் செய்த மக்களை பழி வாங்கும் நோக்கமே ஆகும். அதற்கு இன்னொரு உதாரணம் உயர்தர பரீட்சை நடந்து கொண்டிருந்த வேலை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பரீட்சை முடியும் வரை மின்சாரத்தை இடை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். அதற்கு விக்கிரமசிங்க கடந்த 17 ஆம் தேதி முதல் 24 மணித்தியாலத்துக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கின்றார்.
உங்கள் அப்பன்களும் அம்மாக்களும் எனக்கு வாக்களிக்கவில்லை அதனால் நீ இவற்றையெல்லாம் வாங்கி கட்டிக்கொள் என உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களை மின்சாரத்தை துண்டித்து பழிவாங்கிய ஜனாதிபதியாக ரணிலுள்ளார்.
தமிழ் மக்களின் இரத்தத்தை குடிக்கும் காட்டேரியாக ரணில் விக்ரமசிங்க இருந்துள்ளார். 13 ஆம் திருத்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீண்டு நிலைக்கும் தீர்வு இல்லை என்பது எமது நிலைப்பாடு” என்றார்.
