வடமாகாண உதைபந்தாட்ட வீரர்களை தேசியமட்டத்தில் பிரகாசிக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ண சிந்தனையில், வடமாகாணத்தில் தலை சிறந்த கழகமான ஊரெழு றோயல் வி.கழகத்தால் “வடக்கின் சமர்” தொடர் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.
பல வீரர்கள், பயிற்சியாளர்கள், உதைபந்தாட்டத்தை நேசிக்கும் உள்ளங்கள், மற்றும் ரசிகர்கள் எனப் பலரின் பாராட்டுக்களோடும், ஊக்குவிப்புக்களோடும் “வடக்கின் சமர்” தொடர்
களம் கண்டு வருகின்றது.
இந்நிலையில், இத்தொடரை சிலர் விமர்சித்தாலும், அத்தகைய விமர்சனங்களுக்கு அஞ்சாது, “வீரர்களின் திறமையை வெளிக் கொணர்வதே தமது இலக்கு” என்ற வீராப்புடன் தொடர்ச்சியாக போட்டியை நடத்தி வருகின்றது றோயல் வி.கழகம் என ஒரு பிரபல வீரர் கருத்து வெளியிட்டார்.
இந்நிலையில், வடக்கின் சமரின் மூன்றாவது பருவகாலத்தொடர் கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று மாத காலமாக இடம்பெற்ற போட்டிகளின் பின்னர் வடக்கின் சமர் இறுதிப்போட்டிக்கு நெருங்கியுள்ளது.
50 க்கு மேற்பட்ட கழகங்களின் பங்கு பற்றுதலோடு ஆரம்பிக்கப்பட்டு, முதல்சுற்றுப்போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்றன.
வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் லீக் முறையில், 16 கழகங்கள் உள்வாங்கப்பட்டு, நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் காலிறுதிப்போட்டிக்கு 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
அவ்வகையில், முதலாவது காலிறுதி ஆட்டத்தில் குருநகர்
பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் வி.கழகம் மோதியது. இதில் பாடுமீன் வி.கழகம் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது காலிறுதிப் போட்டியில் வடமராட்சி
நவஜீவன்ஸ் வி.கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்.நீக்கிலஸ் வி.கழகம் மோதியது. இப்போட்டியில் நவஜீவன்ஸ் வி.கழகம் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்றாவது காலிறுதிப் போட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை கலையொளி வி.கழகம் மோதியது. இதில் சென்மேரிஸ் வி.கழகம் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நான்காவது காலிறுதியாட்டத்தில் ஞானமுருகன் வி.கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி வி.கழகம் மோதியது. இதில் ஞானமுருகன் வெற்றிகொண்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் மோதிய போட்டியில் சென்.மேரிஸ் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி நவஜீவன்ஸ் வி.கழகம் மோதியது. இப்போட்டியில் பாடுமீன் வி.கழகம் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வடக்கின் சமர் தொடரில், தொடர் வெற்றிகளோடு அனல்பறக்கும் ஆட்டங்களோடு அதிரடி காட்டிய, யாழ்.மண்ணின் உதைபந்தாட்ட சிகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்.மேரிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றமை வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இத்தொடரில், ஒரு தோல்வியை மட்டும் சந்தித்து அதிரடியோடு கலந்த அட்டகாசமான ஆட்டங்களை வெளிப்படுத்திய பாடுமீன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமை உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அவ்வகையில், யாழ்.மண்ணின் அசுரபலம் பொருந்திய இரு அணிகளான நாவந்துறை சென்மேரிஸ் வி.கழகமும், குருநகர் பாடுமீன் வி.கழகமும் றோயலின் “வடக்கின் சமரின் மூன்றாவது பருவகால தொடரின் இறுதிப்போட்டியில் சமராட்டம் செய்ய தயாராகி வருகின்றன.
இப்போட்டிகள் மூலம் இரண்டு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யாழ்.மண்ணின் வீரர்களும் தேசிய அணியில் பிரகாசிக்க பலம் சேர்க்க வேண்டுமென, வடமண்ணின் உதைபந்தாட்ட சிகரம் என அழைக்கப்படுபவரும், இத்தொடரின் ஆரம்ப கர்த்தாவுமான “வெள்ளையண்ணா” என செல்லமாக அழைக்கப்படும் தர்மகுலநாதன் வீரர்களிடம் அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
தற்காலத்தில் ஒரு விளையாட்டு நிகழ்வை நடாத்தி முடிப்பது என்பது ஒரு போர்க்களத்தில் நிற்பதற்கு சமனாகும். அவ்வகையில் “வீரர்களின் திறமையை வெளிக்கொணர்வதே தமது இலக்கு” என இத்தொடரை பல தடைகள், சிரமங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் நடாத்தி இறுதிப் போட்டிவரை நகர்த்தி சென்றிருக்கும் றோயல் வி.கழக நிர்வாகம், மற்றும் றோயல் விளையாட்டுக்கழக வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அத்தோடு, இறுதிப்போட்டியை வெறுமனே நடத்தி முடித்தால் சரி என்று நினைக்காது, வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், சர்வதேச தரத்தில் இடம்பெறும் இறுதிப்போட்டிக்கு ஒப்பான முறையில், போட்டிகள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றமை “வடக்கின் சமரின்” மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், பெறுமதிக்க பணப்பரிசில்களோடு, தமிழர்களின் பராம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி அணிகளை ஊக்குவிப்பது றோயலின் தனித்துவமாக மிளிர்கின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் இறுதிப்போட்டி சிறப்பாக இடம்பெற்று நிறைவுற வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக்கொள்வதில் இத்தொடருக்கு ஊடக அனுசரணை வழங்குகின்ற “தமிழ் ஒளி” இணையத்தளம் பெருமிதம் கொள்கின்றது.
