மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த மாணவியின் காதலர் எனத் தெரிவிக்கப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (22) தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாக நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தாயரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதற்கமைய, செயற்பட்ட பொலிஸார் குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.
இதன் போது 2 வருடங்களாக காதலிப்பதாக ஏமாற்றி அவ்விளைஞன் அக்கால கட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்துகுறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன், அதனை காணொளியாக தனது கைத்தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.
பின்னர் 2 வருடங்களாக தொடர்ந்த காதல் பின்னர் இடைநடுவில் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த இளைஞன் விரக்தியுற்று மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோக காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து குறித்த மாணவியின் தாயார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து வியாழக்கிழமை (23) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 8 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
