உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு, தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூபா 21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய நேற்று (01) உத்தரவிட்டது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவுபிறப்பித்தது.
இந்த தாக்குதல் குறித்து புளனாய்வுப்பிரிவிக்கு முன்னரே தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவை 100மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு இதனுடன தொடர்புபட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தாக்குதலில் பலியானவர்களுக்கு 50 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பிலான உத்தரவு பிறப்பிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நட்டஈடு தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்களான சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோரால் இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
