யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) போட்டிகள் இன்று (02) ஆரம்பமாகின்றது.
இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் ஏல முறையில் நடைபெறும் ஒரேயொரு கரப்பந்தாட்ட லீக் போட்டிகளாக இவ் போட்டி அமைகின்றது. இப்போட்டிகள் மார்ச் 2ஆம் திகதி முதல் மார்ச் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் பருவகால போட்டிகள் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாவது பருவகால போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது.
இத்தொடரில் 9 அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நாளை இடம்பெறும் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் ஆவாரங்கால் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இரண்டாவது போட்டியில், சங்கானை செலஞ்சர்ஸ் மற்றும் ரைசிங் ஐலண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டிகள் நாளை மாலை 6.00 மணியளவில் ஆவரங்கால் மத்திய வி.கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
மேற்குறித்த நான்கு அணிகளுடன், வல்வையூர் வொலி வொரியர்ஸ், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ், நீர்வை பசங்க, யுனிவர்சல் ஸ்டார்ஸ் புத்தூர் மற்றும் சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி ஆகிய அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கு இரண்டாவது தடவையாகவும் ஜேர்மனி “அட்சயா இண்டர்நெசனல்” நிறுவனம் பிரதான அனுசரணையாளராகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்டார் பூட் ஸ்டோர்ஸ் நிறுவனம் இணை அனுசரணையாளர்களாகவும் இணைந்துள்ளனர்.
