நாட்டில் எதிர்வரும் காலத்தில் மேற்க்கொள்ளப்படவுள்ள சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“மூன்று போகங்களுக்குப் பிறகு இம்முறை TSP (சேற்று உரம்) உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த உரத்துடனான கப்பல் ஏதிர்வரும் மார்ச் 15 – 20 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளது.
இவற்றிற்கு விவசாயிகளிடம் இருந்து எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. இவை அனைத்தையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன், எதிர்வரும் சிறு போகத்திற்கு மட்டுமன்றி கடந்த பெரும்போகத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கும் உரத்தை விநியோகிக்க உள்ளோம்.
தற்போது எம்மிடம் ஓரளவு யூரியா உரங்கள் இருப்பில் காணப்படுகின்றன. 25,000 மெட்ரிக் டொன் டெண்டர் ஒன்றும் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் ஒரு டெண்டரை எதிர்பார்த்துள்ளோம். இவற்றினூடாக இம்முறை விவசாயிகளுக்கு ஒரு சலுகையாக 10,000 ரூபாவிற்கு யூரியா உரத்தினை குறித்த நேரத்தில் வழங்க உள்ளோம்.
அத்துடன் கடந்த முறை 19,500 ரூபாவிற்கு வழங்கப்பட்ட பண்டி உரத்தை இம்முறை 10,000 ரூபாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளோம். அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்”- என்றார்.
