“இன்றைய உலகின் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் விளையாட்டு வீரர்கள் இருப்பது பலருக்கு தெரியாத நிலையில் விளையாட்டுக் கல்வியின் முக்கியத்துவத்தை இளம் சமுதாயம் சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
உரும்பிராய் கற்பக இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற ஞான வைரவர் சமூக அறக்கட்டளையின் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாறிவரும் உலகிற்கு ஏற்ப மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.
எதிர்கால மாணவ சமுதாயம் கல்வி , மொழி அறிவு, விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய கல்வி நிலைகளை விருத்தி செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.
ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லை என்கிறோம். ஆனால், மறுபுறம் வேலை இருக்கிறது. ஆனால், எமது கல்வி அதை நோக்கியதாக அமையவில்லை.
ஏனெனில், ஒரு மாணவன் பெற்றோர் , சமூகம் மற்றும் ஆசிரியர்களின் கனவுகளை சுமந்து கொண்டு செல்கின்ற நிலையில் அவனது ஆளுமை பல துறைகளிலும் விருத்தி செய்ய வேண்டி உள்ளது.
மாணவர்களை குறுகிய வட்டத்துக்குள் நிற்க விடாமல் பரந்துபட்ட அளவில் அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கு அவர்களை வழிப்படுத்துபவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா துன்பியல் நிகழ்வு எமக்கு பல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கின்ற நிலையில் விடாமுயற்சி மூலம் சாதிக்கலாம் என்ற உணர்வு எம்மவர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, யாழில் பல்வேறு சமூக அறக்கட்டளை நிறுவனங்கள் தமது சமூகம் சார்ந்து பல்வேறு வேலை திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில் இளம் சமுதாயத்தை சிறந்த முறையில் வழிப்படுத்த உதவ வேண்டும்” – என்றார்.
