“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிகளுக்கு இடையிலானழ துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் முடிந்தது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் போட்டி ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி 46.2 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சார்பில் எஸ்.சுமிஸ்கரன் 32 ஓட்டங்களையும் ரி.அபிசாந் 15 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சார்பில் எல்.கயானன் 4 இலக்குகளையும் கே.நிதுசன் 03 இலக்குகளையும் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 49 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் முதல் நாள் முடிவுக்கு வந்ததுடன் இறுதிநாளான சனிக்கிழமை ஆட்டத்தை தொடர்ந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
எஸ்.வசீகரன் 43 ஓட்டங்களையும் என்.ஸ்ரிபன் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மகாஜனா கல்லூரி சார்பில் கே.தூவாரகன் 6 விக்கெட்டுக்களையும் யு.வை.றொசான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸிற்காக 74 ஓட்டங்கள் பின்னிலையில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா 65 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை குவித்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
மகாஜனா சார்பில் துடுப்பாட்டத்தில் எஸ்.அபர்ணன் 81 ஓட்டங்களையும் கே.துவாரகன் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி எல்.கயானன் 3 விக்கெட்டுக்களையும் கே.நிதுசன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
ஆட்டநாயகனாக ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வீரர் என்.ஸ்ரிபனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக மகாஜனக் கல்லூரி வீரர் எஸ்.அபர்ணனும் சிறந்த பந்துவீச்சாளராக மகாஜனக் கல்லூரியின் கே.துவாரகனும் சிறந்த களத்தடுப்பாளராக ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் கே.சீராளனும் தெரிவு செய்யப்பட்டனர்.
