நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபை தேர்தலை ஒத்திவைத்ததன் காரணமாகவே ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளர்கள் கூட வெற்றியடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த காலத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த அனைத்து அரசாங்கங்களும் படுதோல்வியையே சந்தித்திருந்த வரலாறே காணப்படுகின்றது.
1975ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க நாடாளுமன்ற தேர்தலை 2 வருடங்கள் ஒத்தி வைத்தார். ஆனால், அதன் பெறுபேறு 1977ஆம் ஆண்டு பாரிய படுதோல்வியாக அமைந்தது.
எனவே, தேர்தலை ஒத்திவைத்தால் அது அரசாங்கத்திற்கு இலாபம் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை.
நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. தனியார் வைத்தியசாலைகளின் விலைகளை தாங்கிகொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
வரிசுமையினை தாங்கி கொள்ள முடியாத நடுத்தர வர்க்கத்தினர் இன்று செய்வதறியாது நிர்கதியாகியுள்ளனர்.” – என்றார்.
