யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து சென்று வசித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அவருடைய தாயார் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மயிலிட்டி 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மஸ்மின் சேரன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக அவருடை தாயார் கண்ணீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் காணாமல் போயுள்ளதாக தாயார் குறித்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது மகனின் தொலைபேசி தொடர்பு 2021 ஆம் ஆண்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தாயார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் 2010 ஆம் ஆண்டு பிரான்ஸில் புகலிடக்கோரிக்கை கோரியுள்ளார். எனினும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் தாயார் கணவனை இழந்த நிலையில், மகனைத்தேடி பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் முயற்சியில் தற்பொது இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அரசாங்கம், பொலிஸார், பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
