மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும்,இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தமைமையில் இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் மாவட்ட செயலகத்துக்குள் சென்றுள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டடது.
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி அதுவும் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
