2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
நேற்று (03) இடம்பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற IPL தொடரின் 6வது போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி முதலில் களத்தாடுப்பை தேர்வு செய்தது.
இதனடிப்படையில், சென்னை சுப்பர் கிங்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ருதுராஜ் கைக்வாட் மற்றும் டெவோன் கொன்வே ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 110 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் இலக்கு வீழ்த்தப்பட்டது.
ருதுராஜ் கைக்வாட் 31 பந்துகளில் 57 ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 29 பந்துகளில் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களின் மிகச்சிறந்த ஆரம்பத்துடன் சிவம் டுபே 16 பந்துகளில் 27 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 14 பந்துகளிலும் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியாக 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக மகேந்திரசிங் டோனி 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சென்னை சுபர் கிங்ஸ் அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகள இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 இலக்குகளை சாய்த்தனர்.
218 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு கெயல் மேயர்ஸ் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
அதிரடியாக ஆடிய அவர் வெறும் 22 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்ததுடன், முதல் 6 ஓவர்களில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 80 ஓட்டங்களை பெற்றது.
மேயரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தீபக் ஹூடா மற்றும் கே.எல். ராஹூல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சுபர் ஜயண்ட்ஸ் அணி தடுமாற தொடங்கியது. அதுமாத்திரமின்றி குர்னால் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஏமாற்றமளித்து வெளியேற, நிக்கோலஸ் பூரன் மாத்திரம் 18 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில், 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து சுபர் ஜயண்ட்ஸ் அணி 205 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் மொயீன் அலி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேசபாண்டே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
