நாடாளுமன்றத்தில் இன்று (04) புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை ‘நீங்கள் இனவாதி’ என்றும் தொல்பொருள் திணைக்களத்தைவைத்து அவர் நாட்டில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்க முற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், தொல்பொருள் திணைக்களத்தின்மூலம் வடக்கு கிழக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புக்களிடம் இருந்து எத்தகைய நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றாலும் இனவாதத்தை தூண்டும் அரசாங்கம் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றன.
நாட்டில் உணவுக்கும் தண்ணீருக்கும் பணம் இல்லாத சூழலில் தொல்பொருள் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது.
இவ்வாறான இனவாத செயல்கள் தொடருமானால் ஐ.எம்.எப். உட்பட எவராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு,கிழக்கை முடக்கி போராடுவோம்” என்றார்.
