யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் உட்புகுந்து சட்டரீதியற்ற மதக்குழு ஒன்று அராஜகமாக அச்சுறுத்தியதை தாம் வன்மையாக கண்டிப்பதாக மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர். அ.ஜோன் ஜிப்பிரிக்கோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அச்சுவேலி பகுதியில் மதக்குழு ஒன்று அரச காணியில் அமைந்திருந்த நெசவாலை கட்டிடமொன்றை பலவந்தமாக ஆக்கிரமித்து மதமாற்றப்பணியில் ஈடுபட்டு வருகின்றதாக அப்பகுதி மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக குறித்த பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை நடுநிலையாக வெளியிட்ட “உதயன்” பத்திரிகை நிறுவனத்தை அச்சுறுத்தும் விதமாக சொகுசுபஸ் மற்றும் பட்டா வாகனத்தில் வந்த போதகர் தலைமையிலான 30 பேர் கொண்ட கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இது ஊடக சுதந்திரம் மற்றும் பொதுமக்களிற்கான சமூகம் சார் விடயங்களை சுயாதீன செய்தி அறிக்கையிடும் பத்திரிகை பணியை கேள்விக்குட்படுத்தும் ஓர் அராஜக செயலாகும்.
தாம் செய்தது பிழையான விடயம் என தெரிந்தும் அதை செய்தி ஆக்கி மக்களுக்கு வெளிப்படுத்தியதை அச்செய்தியில் தவறு இருப்பின் சட்ட ரீதியாக அணுகுவதை விடுத்து அராஜக முறையில் அச்சுறுத்தும் பாணியில் அணுகியமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
உண்மை செய்திகளை அறிக்கையிடுவதில் ஆயுததாரிகளின் நேரடி தாக்குதலுக்கே அஞ்சாது உண்மைகளை துணிவுடன் உரைத்த உதயன், அந்த பழைய ஆயுததாரிகளின் மறைமுக கர ஆதரவுடன் மத பேதங்களின்றி ஒற்றுமையாக வாழும் தமிழ் மக்களிடையே பிளவை உண்டாக்கும் வண்ணம் மதத்தை வியாபார பாணியில் பரப்பிட எத்தணிக்கும் இவர்களின் அராஜக அச்சுறுத்தல்களிற்கா அஞ்சப்போகிறான்?” – என குறித்த கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
