2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் நேற்று (15) இடம்பெற்ற 20ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கெபிடல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றியினை பதிவு செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் களத்தடுப்பாட களமிறங்கியது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் அணியானது 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 174 ஓட்டங்கள் பெற்றது.
ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி தன்னுடைய 37ஆவது IPL அரைச்சதத்தோடு 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றார்.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் மிச்சல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 இலக்குகளையும், லலித் யாதவ் மற்றும் அக்ஷார் படேல் ஆகியோர் தலா ஒரு இலக்கினையும் வீழ்த்தினர்.
175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
