வடக்கு – கிழக்குப் பகுதிகளில் எதிர்வுரும் 25 ஆம் திகதி பூரண கதைவடைப்பிற்கு தமிழ் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழர்களின் தொல்பொருள் சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் அழிப்புக்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவே கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (17) கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்குள்ளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் மேற்க்கொள்ளப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
