சைவ கோவில்கள், பாரம்பரியமாக மக்கள் வழிபட்டுவந்த கோவில்கள் அழிக்கப்படுவதும் அங்கு மக்கள் செல்வதை தடுப்பதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிங்கள பௌத்த பேரினவாதிகள், வடக்கு – கிழக்கில் மத ஆதிக்கத்தை திணித்து அதன் மூலமாக ஒரு இன மேலாதிக்கத்தை திணிக்கின்ற செயற்பாட்டினை கிரமமான முறையில் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் முன்னெடுக்கின்றனர்.
ஒரு நாட்டில் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான உரிமைகள், பாதுகாக்கப்பட வேண்டும். மாறாக அதனை எந்த தரப்பினராலும் நிராகரிக்க முடியாது.
குறிப்பாக தனி மனிதன் சிந்திக்கின்ற உரிமை மற்றும் தான் சார்ந்த மதத்தினை வழிபடுகின்ற உரிமையும் எந்த மதத்துடனும் சேர்ந்து கொள்ளுகின்ற உரிமையும் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு கூட அடிப்படை உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடு பௌத்த நாடு என்ற மமதையில் அரசாங்கத்தின் உதவியோடு பௌத்த பிக்குகளும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
