சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கை கடலில் மீனினங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
இன்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
,இலங்கையில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் முன்வைத்த போதும் இது தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அதேவேளை தமிழக மீனவர்கள் எங்களுடைய உறவுகளாக காணப்பட்டாலும் தொடர்ந்தும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்
தற்போது இந்தியாவில் 61 நாட்கள் மீன் உற்பத்தி காலமாக அறிவித்து மீன்பிடியை நிறுத்தியுள்ளனர். எமது பகுதியிலுள்ள அதிக மீன் உற்பத்தியாகும் முருகைக் கற்பாறைகள் உள்ள பகுதிகள் சட்டவிரோத ரோலர் தொழில்கள் மூலம் பாதிப்படைகின்றது.
எனவே, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
