“நாம் கடந்த 13 ஆண்டுகளாக .ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப்போயுள்ளோம். மதத்தின் பேரால் எம்மை பிரிக்கும் சக்திகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ் மக்கள் பலமடையாத வரை யாருடனும் பேரம் பேச முடியாது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மேதின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டங்கள் நசுக்கப்பட்டதைப் போல் அறகலயும் நசுக்கப்பட்டது. இந்தியாவில் தோன்றிய வேளான் பசுமை போராட்டம் மற்றும் ஏனைய போராட்டங்களுடன் ஒப்பீட்டளவில் வினைத்திறனானது. இந்த நாடு அரை நூற்றாண்றாண்டில் நான்கு போராட்டங்களை ஒடுக்கியிருந்தது.
இப் போராட்டத்தில் மேற்கத்தேய தூதரகங்கள் பின்னணியில் ஆதரவு வழங்கின. அந்த போராட்டத்தின் நன்மைகளை மேற்கு நாடுகள் தமது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டன.
இதிலிருந்து தமிழ் மக்களுக்கு ஒரு பாடமுள்ளது. ஆளும் இனமென்றாலும் சரி வேறெந்த இனமாகவும் இருந்தாலும் சரி போராட்ட கனியை பறிப்பது நாட்டின் வெளியேயுள்ள வேறொரு தரப்பாகும்.
எந்தவொரு அரசும் நீதியின் பால் உதவ மாட்டார்கள் தங்களின் நலனின் அடிப்படையில் தான் உதவுவார்கள். இந்த வகையில் ஈழத் தமிழினமும் நலன்களின் பால் பேரம் பேசுதலை அடிப்படையாகக் கொண்டு கையாள வேண்டும்.
அவர்களுடைய நலன்களும் எங்களுடைய நலன்களும் சந்திக்கும் பொதுப் புள்ளியைக் கண்டறிய வேண்டும். தமிழ் மக்கள் பலமடையாத வரை யாருடனும் பேரம் பேச முடியாது.
எந்தவொரு அரசும் நலனின் அடிப்படையில் உதவும் என்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியே உதாரணமாகும்.
கனடாவில் போர்க்குற்றம் தொடர்பாக 4 பேருக்கு தடை விதித்துள்ளது.
சீனாவை நோக்கி சாயும் இலங்கையின் வரையறையை உணர்த்துவதற்காகத் தான். அதை புலம்பெயர் தமிழ் சமூகம் ஆரோக்கியமாக கையாண்டு வெற்றிகண்டுள்ளது.
இனப்படுகொலை பிரேரணை தனிப்பட்ட தீர்மானமாகத் தான் கனடாவில் வந்தது. ஆனால் அது கனேடிய அரசின் தீர்மானமில்லாமையானாலும் அதை அனுமதித்தது அரசியல் நோக்கத் தீர்மானமாகும்.
இந்த அடிப்படையில் வெளியரசுகளுடன் உறவுகளை வைத்துக் கொண்ளும் போது நலன்களின் அடிப்படையில் விஞ்ஞான பூர்வமாக அறிவுபூர்வமாக பேரம் பேசுதலை முன்வைக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நடக்கும் சொற்போர்களை யூரியூப்களில் கண்டு களிப்பவர்களாக மாறிவிட்டோம். நாங்களே எங்களைத் துரோகிகளாலும் கட்சிகளும் அமைப்புக்களும் புலம்பெயர் சமூகமும் பிரித்து சிதறிப்போயுள்ளோம்.
இப்படியெல்லாம் போராடிய மக்களா என மற்றவர் பார்த்து கேட்குமளவிற்கு மாறிவிட்டோம். ஒரு தனிமனிதன் ஒரு வார்த்தையை தவறுதலாக வெளியிட்டவுடன் அவரின் கடந்தகால செயற்பாட்டைப் பற்றி மறந்து கீழ்த்தரமாக விமர்சிக்கும் சமூகமாக மாறியுள்ளோம்.
வெடுக்குநாரி மலையி்ல் சட்ட ரீதியாக வெற்றி கிடைத்த சம நேரத்தில் தையிட்டியில் பஞ்ச ஈச்சரத்தை விட உயர்வான விகாரையொன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை யாராலும் தடுக்க முடியவில்லை.
மாவீரர் துயிலுமில்லங்களில் முன்னாள் கண்ணீர் வடிக்கின்றோம். ஆனால் வாக்குகள் உரியவர்களை சென்று சேர்வதில்லை. கடந்த காலங்களில் முன்னாள் போராளிகள் அனைத்து கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டபோதும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவில்லை.
எம்மை விட பலமான சிங்கள மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி என்ன நடந்தது என்பதை அவதானிக்க வேண்டும். ஆகவே ஒன்றுபட்ட மக்கள் கூட்டமாக பயணிக்க வேண்டும்” என்றார்.
