வவுனியா தரணிக்குளம் கணேசுவரா வித்தியாலத்தின் தமிழ் பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் எதிர்ப்பு போராட்டம் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.
எமது பாடசாலையின் தமிழ்பாட ஆசிரியர் மீது அண்மை காலமாக தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
அத்துடன் சமூகத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை தட்டி கேட்டதற்காக இழிவான முறையில் அவர் பழிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அந்த விடயத்தை பாடசாலை சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு குறித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுத்து ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க வேண்டிய கட்டாய நிலமையில் நாம் இருக்கின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எமது தமிழ் ஆசிரியருக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடு, நீதியை நிலைநாட்டு, அவதூறு வார்த்தை பேசாதே, உண்மை மட்டும் பதிவிடு, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காதே போன்ற வாசகங்களை தாங்கி பதாதைகளை தாங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
