“ரணில் – ராஜபக்சாவின் நரித் தந்திரத்தை புரியாமல் தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்கக் கூடாது. மாறாக ஒருமித்து நினைவேந்தல்களை மேற்கொள்ளும் தருணத்திலே எங்களுக்கான நீதி கிடைக்கப்பெறும்” என பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தாலும் தொடர்ந்தும் தமிழினம் அடக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சிங்களப் பேரினவாதத்தால் உச்ச கட்டமாக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதனை, இளைய சமூகத்திற்கு எடுத்துக்கூறும் தேவைப்பாட்டின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வடக்கு – கிழக்கெங்கும் 8 மாவட்டங்களுக்குச் சென்று வழங்கவுள்ளோம்.
2006 ஆம் ஆண்டு 8 ஆம் மாதமளவில் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களுக்கெதிரான யுத்தத்தை ஆரம்பித்து மனித குலத்திற்கு எதிராக இரசாயன குண்டுத தாக்குதல் , செல் வீச்சுத் தாக்குதல்கள் என்பவற்றை மேற்கொண்டு சுமார் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்படுகொலைக்குட் படுத்தப்பட்டனர்.
நினைவேந்தல்களை கைப்பற்றவேண்டும் என பல்வேறு தரப்பு கூறும் நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் 22 ஆசனங்களையும் எந்தவொரு தமிழ்க்கட்சிகளும் முழுமையாகக் கைப்பற்றாத நிலையே காணப்படுகின்றது.
அந்தவகையில், நாடாளுமன்றத்தை முழுமையாகக் கைப்பற்றிவிட்டு நினைவேந்தல்களை கைப்பற்றுவது பற்றி சிந்திக்கலாம் என குறித்த தரப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழர் தாயகத்தில் போராளிகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்புகள் அமைதியாகக் காணப்படும் நிலையில் எங்கோ இருந்த தரப்புக்கள் தற்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கின்றனர்.
திலீபனின் நினைவேந்தல் , அன்னை பூபதியின் நினைவேந்தல் போன்றவற்றில் குழப்பங்கள் இடம்பெற்றிருந்து.
முள்ளிவாய்க்கால் கஞ்சியானது மறக்க முடியாத சின்னமாக ஈழத்தமிழர்களின் வரலாற்றில் காணப்படுகின்றது. இவை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கவுள்ளோம். இதன் முதற்கட்டமாக நாளை (9) காலை ஆரம்பமாகின்றது.
வடமராட்சி மண்ணிலே அமைந்துள்ள தலைவரின் இல்லத்திற்கு முன்னாள் ஆரம்பமாகி யாழ் மாவட்டம் முழுவதும் இச் செயற்பாடு முன்னடுக்கவுள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலானது எதிர்வரும் 15 ம் திகதி வரை வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் வழங்க உள்ளோம்.
சிதறியிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுபடுத்தியது எமது மாணவர் ஒன்றியமே. எனவே இம்முறையும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் மற்றும் நினைவேந்தலுக்கு பொது அமைப்புக்கள் , சிவில் சமூகங்கள் உட்பட அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து சுமூகமான முறையில் முன்னெடுக்கும்படி மாணவர் ஒன்றியம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
