திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்படும் புத்தர் சிலை நாளை மறுதினம் வைக்கப்பட உள்ளதாக திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு அடி உயரம் கொண்ட குறித்த புத்தர் சிலையானது திருகோணமலை நகரில் உள்ள நெல்சன் திரையரங்குக்கு முன்னால் வைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவு கூறும் முகமாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக தாய்லாந்தில் இருந்து குறித்த புத்தர் சிலையோடு 50 பிக்குகள் நாளை இலங்கை வரவுள்ளதாகவும், இவர்கள் தங்குவதற்காக நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
