தன்னுடைய குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து டுபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – சுண்டுக்குழி பதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் மற்றும் அவருடைய சகோதரரான 22 வயதுடைய கமலதாஸ் டிலக்சன் ஆகியோர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் டுபாய்க்கு வேலைக்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், 26 வயதுடைய நிலக்சன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருடன் இரு மலையாள நபர்கள் காலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் மாலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞனின் படுகொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தையும் தனது இரண்டாவது மகனான டிலக்சனையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர்களது தாயார் உருக்கமான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைத்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பனவும் திருடப்பட்டு கொலைக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
