யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்திருந்தார்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் விளையாட்டுக்கழகம் ஒன்றுடன் சந்திப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக்கழக இளைஞர்களுடன் சந்திப்பு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எமது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள் பொலிஸ் பாதுகாப்பை ஏற்காதவர். அவரது பாதுகாப்பில் எமது கட்சி உறுப்பினர்கள் அதிக கவனத்துடன் இருப்பார்கள்.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் காணப்பட்ட மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து நின்றனர்.
எமக்கு அவர்கள் இருவரின் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் இடுப்பிலும் துப்பாக்கி இருப்பது போல் இருந்தது.
அதனால், அவர்கள் அருகில் சென்று இங்கு ஏன் நிற்கின்றீர்கள் எனக்கேட்டோம். அதற்கு அவர்கள் “அருகில் பரீட்சை நிலையம் உள்ளது. முறைப்பாடு கிடைத்தது வந்தோம் ” என்றனர்.
பரீட்சை நிலையத்தை பார்வையிடுவதற்கு இங்கு வந்து நிற்கும் நீங்கள் யார் எனக்கேட்டோம். அதற்கு “சிஜடி” என்றனர்.
சிஜடி என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்டோம். அதன்போது கஜேந்திரகுமார் எம்.பியும் அருகில் வந்து நின்று அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார்.
அதன்போது, ஒருவர் தப்பியோட முயன்றார். அவரைப் பிடிக்க முயன்ற போது கஜேந்திரகுமார் எம்.பியை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். மற்றையவர் தப்பி ஓட முடியாது பிடிக்கப்பட்டார்.
இதன்போது அருகில் உள்ள பாடசாலையில் காவலில் இரண்டு பொலிஸார் வந்தனர். அதில் சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், கெட்டவார்த்தைகளாலும் பேசினார்.
இதன்போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து கஜேந்திரகுமார் எம்.பியை சுடுவது போல் மிரட்டினார்கள்.
இந்தச் சமயத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வருகை தந்தார். ஏ.ஜயதிஸ்ஸ என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தானே அந்தப் பகுதிக்கான பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி என்றார்.
அவரும் முன்னணியினர் மடக்கி வைத்திருக்கும் நபர் அரச புலனாய்வாளர் என்றும், அவரை விடுவிக்கும்படியும் வலியுறுத்தினார்.
அந்த இருவரும் இப்படித் தவறாக நடந்துகொண்டதற்காகத் அவர்களுக்குத் தண்டனை இடமாற்றம் வழங்குவார் என்றும், இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
ஆனால், முன்னணியினர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரைக் கொண்டு வந்து அடையாளப்படுத்தும் வரைக்கும் மடக்கி வைத்திருந்த நபரை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் தர்க்கமான சூழல் எழுந்தது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு வழங்குமாறும் சப் இன்ஸ்பெக்டர் ஜயதிஸ்ஸ கஜேந்திரகுமார் எம்.பியிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தின் மூலம் தனது நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன் என்று கூறிய பின்னர் தடுத்து வைத்திருந்த நபரை விடுவித்து அங்கிருந்து கஜேந்திரகுமார் எம்.பி சென்றார்” என்றனர்.
