நான் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (08.06.2023) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் சபாநாயகரைத் தொடர்பு கொண்ட போதும், அவரின் தொடர்பு கிடைக்காமையால், பிரதி சபாநாயகருடன் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பின்னர், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க உடன்பட்டேன்.
எனினும், இதனைப் புறக்கணிக்கும் வகையில் என்னை நேற்று (07) காலை மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள், கொழும்பில் உள்ள எனது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
நான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சபாநாயகரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதாகவும், இதன்போது, கைதுக்கான நீதிமன்ற உத்தரவு சமர்ப்பிக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்துக்கு வந்து சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவதைப் பொலிஸார் தடுக்க முடியாது என சபாநாயகர் உறுதியளித்திருந்தார்.
எனினும், அதனையும் மீறி பொலிஸாரின் உயர்மட்ட கட்டளையின்படி நான் கைது செய்யப்பட்டடேன். எனவே, எனது கைது சட்டவிரோதமானது,இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
