ATL பிறிமீயர் லீக்கினால் நடத்தப்பட்டு வரும் துடுப்பாட்ட தொடரில் ஊரெழு றோயல் அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது.
குறித்த தொடரானது அச்செழு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில், முதல்வாரம் இடம்பெற்ற போட்டியில், ஊரெழு றோயல் அணி அச்செழு பைற்றர்ஸ் அணியுடன் மோதியது. முதலில் துடுப்பாடிய றோயல் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய பைற்றர்ஸ் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றது. 17 ஓட்டங்களால் றோயல் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியுடன் றோயல் அணி மோதியது. 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய ஞானமுருகன் அணி 64 ஓட்டங்களைப் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.
மூன்றாவது போட்டியில், அச்செழு பவர்கிற்றர்ஸ் அணியுடன் மோதிய றோயல் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய பவர்கிற்றர்ஸ் 8 இலக்குகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று 24 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இன்று (16) இடம்பெற்ற 4வது போட்டியில் அச்செழு ஸ்பாட்டன் அணியுடன் றோயல் அணி மோதியது. 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில், 6 இலக்குகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய ஸ்பாட்டன் அணி 9.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 29 ஓட்டங்களை இழக்க 59 ஓட்டங்களால் றோயல் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
இன்று இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில், நாவற்குழி வயல்வோல்ஸ் அணியுடன் மோதிய றோயல் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில், 6 இலக்குகளை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய வயல்வோல்ஸ் அணி 9.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில், 75 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
குறித்த தொடரில் 5 போட்டிகளில் மோதிய றோயல் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
